ஈரோடு

ஈரோட்டில் வியாபாரியின் மனைவியை சாலையில் தர தரவென இழுத்துவந்து கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்த கொள்ளையர்களை காவலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் நல்லியம்பாளையம் சாலையில் மளிகை கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார்.

நேற்று அதிகாலை ஜெயக்குமார் கடைக்குத் தேவையானப் பொருட்களை வாங்குவதற்காக ஈரோட்டில் உள்ள சந்தைக்கு சென்றுவிட்டார். இதனால் அவருடைய மனைவி கீதா (40) அதிகாலை 5 மணிக்கு கடையை திறந்து வியாபாரத்தை பார்த்து வந்தார்.

அப்போது இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே இறங்கி, பொருட்கள் வாங்குவதுபோல கடைக்கு வந்தனர். கீதா அவர்களிடம், என்ன வேண்டும்? என்று கேட்க அவர்கள் இருவரும் கடைக்குள் புகுந்தனர். 

பதட்டத்தில் அலறிய கீதாவின் கழுத்தில் கத்தியை வைத்து, மிரட்டிய அவர்கள் இருவரும் கீதாவிடம் நகையை கழற்றி தரும்படி கேட்டுள்ளனர். நகையை கழற்றி கொடுக்க மறுத்த கீதா, நகையை இறுக்கப் பிடித்தக் கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அவ்விருவரும் கீதாவை தர, தரவென கடையில் இருந்து வெளியே இழுத்து வந்து கழுத்தில் கிடந்த 5 சவரன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர். 

இதில் கீதாவுக்கு கழுத்து மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இதுபற்றி ஈரோடு தாலுகா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்க வழக்குப்பதிந்து நகையை பறித்து சென்ற இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.