தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை ஸ்டைர்லைட் ஆலை நடத்தி வரும் வேதாந்தா குழுமம் மனுத்தாக்கல் செய்துள்ளது. 

தூத்துக்குடியில் இயங்கிவரும் வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த போராட்டத்தின் 100-வது நாளில் வன்முறை வெடித்தது. வன்முறையை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. விஷ வாயு கசிவால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து, மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. இந்நிலையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக்கோரி  வேதாந்தா குழுமம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.