லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வரும் எஸ்.பியான அந்த பெண் அதிகாரி தனக்கு நேர்ந்த செக்ஸ் கொடுமைகள் குறித்து தமிழக டி.ஜி.பி மற்றும் தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் தான் லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியில் சேர்ந்தது முதலே ஐ.ஜி. முருகன் தன்னை தவறான நோக்கத்துடன் அணுகியதாக தெரிவித்துள்ளார். சில சமயங்களில் அவருடையை அறையில் வைத்து என்னை கட்டிப்பிடித்துள்ளதாகவும் அந்த பெண் அதிகாரி தெரிவித்துள்ளார்.
   
பலமுறை நான் தவிர்த்தும், எச்சரித்தும் ஐ.ஜி.முருகன் கேட்கவில்லை என்று அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார். வேலை நேரத்தில் தனக்கு ஆபாசமான எஸ்.எம்.எஸ்கள் அனுப்புவது, ஆபாச படங்கள் அனுப்புவது என்று முருகனின் தொல்லை அதிகரித்துள்ளதாக பெண் எஸ்பி தெரிவித்துள்ளார். சில முறை அவருடைய அறையில் வைத்து ஆபாச படங்களை காட்டி தவறாக நடக்க முயன்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
    
இது குறித்து புகார் அளித்தால் ஆண்டுதோறும் வழங்கப்படும் நன்னடத்தை அறிக்கையில் மோசமான வார்த்தைகளை சேர்த்து எதிர்காலத்தை வீணாக்கிவிடுவேன் என்று ஐ.ஜி முருகன் மிரட்டுவதாகவும் பெண் எஸ்.பி தெரிவித்துள்ளார். இந்த புகார் கடிதம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து முருகன் மீதான புகாரை விசாரிக்க டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.
   
ஏ.டி.ஜி.பிக்கள் சீமா அகர்வால், சு.அருணாச்சலம் மற்றும் டி.ஐ.ஜி தேன்மொழி ஆகியோர் அடங்கிய குழுவை டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் அமைத்துள்ளார்.