ஈரோடு
 
ஈரோட்டில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன என்றும் அதனை அகற்ற வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா முன்னிலை வகித்தார். 

இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

அதன்படி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஆட்சியர் பிரபாகரிடம் மனு ஒன்றை கொடுத்தனர். 

அந்த மனுவில், "பவானி அருகே உள்ள ஆப்பக்கூடல் பவானி சாலையில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்தக் கடைக்கு அருகில் கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் கோயில் இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது. 

இந்த சாராயக் கடையால் பவானி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. 

மேலும் இந்த வழியாக நடந்து செல்லும் மாணவ  - மாணவிகள் மற்றும் பெண்களுக்கு குடிகாரர்களால் பெரும் தொல்லை ஏற்பட்டு வருகிறது. 

எனவே, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர்.

பொல்லான் வரலாறு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் என்.ஆர்.வடிவேல் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்தார். 

அந்த மனுவில், "சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு நினைவுச் சின்னம் அமைப்பதற்காக நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கல்வெட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார்.

இதேபோல பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர். மொத்தம் 224 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியர் எஸ்.பிரபாகர் உத்தரவிட்டார்.