தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளிலேயே மாநிலம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. பல மாவட்டங்களில் நேற்றும் பரவலாக மழை நீடித்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக மஞ்சூர்-ஊட்டி சாலையில் மேரிலேண்ட் என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மலை ரெயில் பாதையில் அடர்லி, ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே 2 ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்து தண்டவாளத்தில் விழுந்தன.

திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் மதியம் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. கொடைக்கானல், தேனி, பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளிலும் மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. எட்டயபுரத்தில் 14 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதிகளிலும் மழை பெய்தது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதே போல் சென்னை, கோவை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு  கனமழை கொட்டியது.


 
மாநிலம் முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. வருகிற 20 மற்றும் 21-ந்தேதிகளில் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வருகிற 20-ந்தேதி (நாளை மறுதினம்) அந்தமான் கடல் பகுதியில் இருந்து ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நோக்கி வருகிறது. இதனால் 20-ந்தேதி கடலோர தமிழகத்தில் ஆரம்பித்து, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.