வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 1-ந் தேதி தமிழகத்தில் தொடங்கியது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கி மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் ‘கஜா’ புயல் பெரிய அளவில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை தாக்கியது.

அதனைத் தொடர்ந்து வங்கக்கடலில் உருவான வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட தமிழகத்தில் மழை பெய்தது. பின்னர், கடந்த மாதம் 25-ந் தேதியில் இருந்து தமிழகத்தில் பெரிய அளவில் மழை இல்லை. தொடர்ந்து வறண்ட வானிலையே நிலவி வருகிறது.

இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை, 112 சதவீதம் பெய்யும் என, கணிக்கப்பட்ட நிலையில், இதுவரை, 40 சதவீதத்துக்கும் குறைவாகவே பெய்துள்ளது. இதனால், வட மாவட்டங்களில், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுமோ என, மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில், தென் கிழக்கு வங்கக்கடலின்  குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது, மேற்கு திசையில் நகரும் நிலையில், நாளை முதல், மூன்று நாட்களுக்கு, சென்னை மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களின் சில இடங்களில் கன மழை பெய்ய வாய்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை வானிலை மையத்தின், மாவட்ட வாரியான முன் கணிப்பின்படி, திருவள்ளூர், விழுப்புரம், கடலுார் மற்றும் புதுச்சேரியில், அதிக மழை பெய்யும் என்றும், 6ம் தேதி, வேலுார், திருவண்ணாமலை, ஈரோடு, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு, மழை முன்னறிவிப்பு விடப்பட்டு உள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதை ஒட்டி உள்ள, சென்னையின் சில பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில், இடைவெளி விட்டு, இரண்டு நாட்கள் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.