கடலூர்
 
வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இரயில் மறியல் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 178 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

"வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதனைத் திரும்ப பெற வேண்டும். 

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பாதுகாக்க மத்திய அரசு பாராளுமன்றத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும்.

அனைத்து கோயில்களிலும் ஆதிதிராவிட - பழங்குடியின மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உண்மை நிலையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையத்தில் மறியல் செய்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நேற்று ஒன்று திரண்டனர். 

அதன்பின்னர் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்துக் கொண்டிருந்த சோழன் விரைவு இரயிலை அவர்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சிலர் இரயில் என்ஜின் மீது ஏறி நின்று முழக்கமிட்டனர். 

இந்தப் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் மாதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் முல்லைவேந்தன், நகர செயலாளர் செந்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் அமர்நாத், ஒன்றிய செயலாளர் ராஜேஷ்கண்ணன், 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுப்புராயன்,  குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் தண்டபாணி மற்றும் ஆதிதமிழர்பேரவை, ஆதிதமிழர் கட்சி, இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர். இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட 78 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். 

அதேபோன்று, விருத்தாசலம் இரயில் நிலையத்தில் மறியல் செய்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பஸ் நிறுத்தத்தில் இருந்து பேரணியாக வந்தனர். 

அப்போது, அங்கு பாதுகாப்புக்கு நின்ற விருத்தாசலம் காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால் காவலாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் காவலாளர்கள் தடையை மீறி சென்னையில் இருந்து குருவாயூர் நோக்கி வந்த குருவாயூர் விரைவு இரயிலை மறித்து போராட்டம் நடத்தினர். 

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வட்ட செயலாளர் அசோகன், மாவட்ட செயற்குழு திருவரசு, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் திருமாறன், தொகுதி செயலாளர் ஐயாயிரம், மாவட்ட துணை செயலாளர் திராவிடமணி, பகுஜன் சமாஜ் கட்சி அருள், அனைத்து மக்கள் விடுதலை கட்சி ராஜகீர்த்தி உள்ளிட்ட 100 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.