கன்னியாகுமரி

எஸ்சி, எஸ்டி பிரிவு வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி கன்னியாகுமரியில் இரயில் மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டோரை காவலாளர்கள் கைது செய்தனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பானது ஆதி திராவிடர் - பழங்குடியினர் வன்கொடுமைகள் (எஸ்.சி, எஸ்.டி.) தடுப்புச் சட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில் உள்ளது. எனவே, வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்தி அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். இதனை அரசியல் சாசனம் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும். 

அனைத்து கோயில்களிலும் ஆதிதிராவிட - பழங்குடியின மக்களுக்கு ஆலய வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உண்மை நிலையை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்களும், பல்வேறு அமைப்பினரும் கன்னியாகுமரி இரயில் நிலையத்தில் இரயில் மறியலில் ஈடுபட்டனர். 

இந்தப் போராட்டத்துக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலர் பு.பெ.கலைவடிவன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாரதி அண்ணா முன்னிலையில் திரளானோர் இரயில் நிலையத்தில் திரண்டனர். 

அப்போது அவர்கள், "எஸ்சி, எஸ்டி பிரிவு வன்கொடுமை தடுப்பு சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். 

அப்போது, சென்னை செல்லும் மின்தொடர் இரயில் வண்டி இரயில் நிலையம் வந்தது. திடீரென விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும், மக்கள் மன்றம் அமைப்பினர் உள்ளிட்டோரும் இரயில் முன்பு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காவலாளர்கள் திரளாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைந்துபோக அறிவுறுத்தினர். ஆனால், அதற்கு மறுத்துவிட்ட போராட்டக்காரர்கள் 200-க்கும் மேற்பட்டோரை காவலாளர்கள் கைது செய்தனர்.