திருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டியை வேடிக்கை பார்த்தவர் மாடு முட்டி பலி
திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை பார்க்கச் சென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் அதிக காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
இதே போன்று திருச்சி மாவட்டம் சூரியூரிலும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டது. காலை 8 மணிக்குத் தொடங்கிய போட்டியில் பல்வேறு பகுதிளைச் சேர்ந்த காளைகளும், காளையர்களும் களம் கண்டனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அரவிந்த் என்ற இளைஞர் ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்ப்பதற்காக வந்துள்ளார். அப்போது ஜல்லிக்கட்டு காளை ஒன்று எதிர்பாராத விதமாக அரவிந்தை ஆக்ரோஷமாகத் தாக்கியது. இதனால் படுகாயமடைந்த அரவிந்த் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் இன்றி அரவிந்த் உயிரிழந்தார்.
இதே போன்று பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் 9 காளைகளை அடக்கிய இளைஞரை காளை முட்டியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.