திருவண்ணாமலை
 
திருவண்ணாமலையில் பசுமை வழிச் சாலையை எதிர்த்து அந்த திட்டத்தின் அரசாணை நகலை எரித்து விவசாயிகள், கம்யூனிஸ்டு கட்சியினர், மாதர் சங்கத்தினர் என போராட்டத்தில் ஈடுபட்ட 91 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

சென்னை -  சேலம் இடையே எட்டு வழி பசுமைச் சாலை ரூ.10 ஆயிரம் கோடி செலவில் தமிழகத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக கடந்த சில நாட்களாக நிலம் அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிராக ஏராளமான விவசாயிகள், தமிழக மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களை கையிலெடுத்தும், இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தீக்குளித்து இறந்துவிடுவோம் என்றும் அழுகுரல் எழுப்புகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த திட்டத்திற்காக நில அளவீடு செய்யவந்த அதிகாரிகளை எதிர்த்து செய்யாறு அருகில் இளம்பெண் ஒருவர் கழுத்தில் பிளேடால் வெட்டி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதுபோன்று மக்கள் எந்தவிதமான போராட்டங்களை செய்தாலும் அவரகளை காவலாளர்கள் கொண்டு ஒடுக்கி, மிரட்டி நிலம் அளவிடும் பணியை சிறப்பாக செய்கின்றனர் அதிகாரிகள். காவலாளர்கள், அதிகாரிகள் மக்களை மிரட்டும் வீடியோக்களும் வலைதளங்களில் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் எட்டு வழி பசுமைச் சாலை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் ஜூலை 6-ஆம் தேதி இந்த திட்டத்திற்கான அரசாணை நகல் எரிக்கும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
அதன்படி திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகில் உள்ள அறிவொளி பூங்கா அருகே நேற்று காலை தனித்தனியாக அரசாணை நகல் எரிக்கும் போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினர், மாதர் சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ள வந்தனர்.

அங்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பே கட்டாயப்படுத்தி காவலாளர்களின் வாகனத்தில் ஏற்றினர். 

அப்போது போராட்டக்காரர்கள் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடவில்லையே, எங்களை ஏன் கைது செய்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது திடீரென விவசாயி ஒருவர் கையில் பேப்பர் ஒன்றை கொளுத்தி கொண்டு, எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினார். இதையடுத்து காவலாளர்கள் விவசாயியின் கையில் இருந்து எரிந்து கொண்டிருந்த பேப்பரை பிடுங்கி எறிந்தனர். 

பின்னர் அவரையும் காவலாளர்கள் கைது செய்து வேனில் ஏற்றினர். இதில் 2 பெண்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை காவலாளர்கள் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் காவலாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எட்டு வழி பசுமைச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தை அடுத்த நினைவு தூண் ரௌண்டானா அருகில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடினர். 

அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தபடி அரசாணை நகல் எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதில் 6 பெண்கள் உள்பட 78 பேர் கைது செய்யப்பட்டனர். 

இப்படி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் மட்டும் 8 பெண்கள் உள்பட 91 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.