திருச்சியில் 2 மாத பச்சிளம் குழந்தையை விற்று சூதாடிய தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் உறையூர் கீழபாண்டமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அப்துல்சலாம். இவரது மனைவி கைருநிஷா. இவர்களுக்கு மொத்தம் 5 குழந்தைகள் உள்ளன. இதில் கடைசி குழந்தை கடந்த 2 மாதத்துக்கு முன் பிறந்த பச்சிளம் ஆண் குழந்தையை, தந்தை அப்துல் சலாம் சமீபத்தில் விற்றுள்ளார். ஏற்கனவே மது மற்றும் சூதாட்டத்தின் அடிமையான அப்துல் சலாம் இந்த குழந்தை பிறந்ததால் தங்கள் குடும்பத்தில் வறுமை தாண்டவம் ஆடுவதாகவும் குழந்தையை யாருக்காவது விற்று விடுவோம் என கூறி வந்துள்ளார். இதற்கு நிஷா கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐந்தாவதாக பிறந்த ஆண்குழந்தை மாயமானது. தனது குழந்தையை காணாததால் அதிர்ச்சி அடைந்த கைருண் நிசா, இதுகுறித்து உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் தனது கணவர் கூறியது குறித்து காவல் நிலையத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதன்பேரில் விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அப்துல் கலாமை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குழந்தையை திருச்சி அண்ணா நகர் பகுதியிலுள்ள ஆரோக்கியராஜ் என்பவர் மூலமாக தொட்டியம் கீழ சீனிவாசநல்லூரை சேர்ந்த சந்தானகுமார் என்பவரிடம் விற்றது தெரியவந்தது. மேலும் 2 மாத ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதோடு அந்த பணத்தில் மது மற்றும் சூதாட்டத்தின் தான் செலவழித்து விட்டதாகவும் அப்துல் சலாம் கூறினார். இதை அடுத்து காவல்துறையினர் குழந்தையை விற்பனை செய்த அப்துல்சலாம், அதற்கு உதவிய ஆரோக்கியராஜ் மற்றும் குழந்தையை பெற்றுக்கொண்ட சந்தான குமார் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து குழந்தையை மீட்ட அவர்கள் தற்பொழுது குழந்தையை பத்திரமாக காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட மூவரையும் திருச்சி குற்றவியல் நீதிமன்ற எண் நான்கில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அதன் முடிவில், அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தற்போது மூவரும் மணப்பாறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது ஆன்லைன் ரம்மி வந்துவிட்ட பிறகு பேருந்து பயணம் முதல் உறங்கச் செல்வது வரை கடன் வாங்கி கடன் வாங்கி விளையாண்டு அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் குழந்தையை விற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
