Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் பலியான தமிழர் முருகன் குடும்பத்துக்கு அனைத்து உதவியும் செய்யப்படும் - பினராயி விஜயன் உறுதி!!

pinarayi vijayan promises to murugan family



கேரளாவில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுத்ததால்  தமிழகத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் பலியானார். அவரின் குடும்பத்தினர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேற்றுச் சந்தித்துப் பேசினர்.

அப்போது, அனைத்து உதவிகளும் முருகனின் குடும்பத்துக்கு செய்யப்படும் என கேரள முதல்வர் உறுதியளித்தார்.

 நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் கேரளாவில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6-ந்தேதி முருகன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்ஸ் மூலம் 4 மருத்துவனைகளுக்கு கொண்டு சென்றும் பல்வேறு காரணங்களைக் கூறி சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டன. இதனால், 7 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டு, இறுதியில் முருகன் பலியானார்.

இந்த விவகாரம் குறித்து கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், “ கேரளவில் இப்படி சம்பவம் நடந்தது வேதனைக்குரியது, வெட்கக்கேடானது. தமிழர் முருகனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோருகிறேன். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்’’ என்றார். மேலும், சிகிச்சை அளிக்காத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். 

இதற்கிடையே விபத்தில் பலியான முருகனுக்கு முருகம்மாள் என்ற மனைவியும், 6 வயதில், 4 வயதில் இரு மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று திருவனந்தபுரத்தில்  உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். 

இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது-

விபத்தில் பலியான தமிழர் முருகனின் குடும்பத்தின் துக்கத்தில், வேதனையில் நாங்களும் பங்கெடுக்கிறோம். இனிமேல், கேரளாவில் இதுபோன்ற துயரமான சம்பவங்கள் நடக்காமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். விபத்தில் சிக்குபவர்களுக்கு உடனடியாக உயிர்காக்கும் சிகிச்சை அளிக்க அரசு தலையிட்டு உறுதி செய்யும். முருகனின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்துவிட்டு வந்த முருகனின் மனைவி முருகம்மாள் நிருபர்களிடம் கூறுகையில், “ முதல்வரைச் சந்தித்து எங்கள் கோரிக்கை மனுவை அளித்தேன். கொல்லம் மாவட்டம், கொட்டியத்தில் ஒரு பால் விற்பனையாளராக எனது கணவர் வேலை பார்த்தார்.

அவர் இறந்துவிட்டதால், வருமானம் இல்லாமல்  சிரமப்படுகிறோம் எனத் தெரிவித்தேன்.  அன்றாட செலவுகளை செய்யக்கூட பணம் இல்லை எனவும், குழந்தைகளின் படிப்புக்காக மற்றவர்களை நம்பி இருக்கிறேன் எனத் தெரிவித்தேன். கேரள அரசு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அதற்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என உறுதியளித்தார்’’ எனத் தெரிவித்தார்.

Video Top Stories