பாளையங்கோட்டை காவலர் குடியிருப்பைச் சேர்ந்த ஆல்வின் 12ஆம் வகுப்பு படித்துவிட்டு மருந்து விற்பனை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த வியாழக்கிழமையன்று  முருகன்குறிச்சியில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆயிரம் ரூபாய் கொடுத்துத் தனது இருசக்கர வாகனத்துக்குப் பெட்ரோல் நிரப்பச் சொன்னார்.

950ரூபாய்க்குப் பெட்ரோல் நிரப்பியபோதே டேங்க் முழுமையாக நிரம்பியதால் ஊழியர் குழாயை வேகமாக வெளியே எடுத்தார். இதில் ஆல்வினின் ஆடையிலும் இருசக்கர வாகனத்திலும் பெட்ரோல் சிந்தியது.

 இதைக் கவனிக்த ஆல்வின் இருசக்கர வாகனத்தை ஸ்டார்ட் பண்ணினார். அப்போது ஒரு செகண்டில் அவரது பைக்கிலும், உடையிலும்  தீப்பிடித்து எரிந்தது. அங்கிருந்த பணியாளர்கள் தீயணைப்புக் கருவியால் உடனடியாகத் தீயை அணைத்தனர்.

40 சதவீத அளவுக்கு தீக்காயமடைந்த ஆல்வின் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி  ஆல்வின் இன்று பரிதாபமாக உயிரிழந்தார். பெட்ரோல் நிலையத்தில் முழு டேங்க் நிரப்பச் சொல்லி வாடிக்கையாளர்கள் பணம் கொடுத்தாலும் குறித்த அளவுக்கு முன்னரே டேங்க் நிரம்புகிறதா என்பதை ஊழியர்களும் வாடிக்கையாளர்களும்  கவனிக்க வேண்டும்.

அதே போல் வண்டி மீதோ உடைகள் மீதோ  பெட்ரோல் சிந்தினால் கொஞ்ச நேரம் பொறுத்திருந்து பைக்கை இயக்க வேண்டும். சாதாரண விஷயமாக இந்த சம்பவத்தை ஆல்வின் நினைத்தால்   இன்று உயிரிழந்திருக்கிறார்.