சேலம் 

சேலத்தில் இரயில்வே சுரங்கபாதையை எதிர்த்து ஆறு மாதங்களாக போராடும் பொதுமக்கள் வருகிற 15-ஆம் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்க முடிவெடுத்துள்ளனர்.

சேலம் மாநகராட்சி அம்மாபேட்டை மண்டலத்திற்குட்பட்ட 37-வது வார்டில் உள்ளது தாதம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி. இங்கு இரயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணிகள் இரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது. 

பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் சுரங்கபாதை அமைப்பதால் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் பொதுமக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சேலம் தாதம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி மனை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. 

இதற்கு சங்கத் தலைவர் இலட்சுமணன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், "இரயில்வே சுரங்கபாதை அமைக்கும் பணியை உடனே நிறுத்த வேண் டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வருகிற 15-ஆம் தேதி இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்" என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் என்.ஜி.ஜி.ஓ. காலனி மனை உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் இலட்சுமணன் செய்தியாளர்களிடம், "சேலம் தாதம்பட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனியில் 40 அடி பிரதான சாலையில் 14 அடி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மீதம் உள்ள 26 அடி பாதையில் இரயில்வே சுரங்கபாதை அமைக்கப்படுகிறது. 

இதற்கு மாநகராட்சியின் அனுமதி பெறவில்லை. இரயில்வே சுரங்கபாதை அமைக்கும் இடத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான இரண்டு ஆழ்துளை கிணறுகள் உள்ளன. தற்போது அதை அகற்றுவதற்கு முடிவு செய்துள்ளனர். 

சுமார் 5000 குடும்பத்தினர் வறட்சி காலத்தில் அந்த ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் எடுத்து வருகிறார்கள். இந்த இரண்டு ஆழ்துளை கிணறுகள்தான் எங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.

சுரங்கபாதையை எதிர்த்து என்.ஜி.ஜி.ஓ. காலனி, சிங்காரப்பேட்டை, கந்தசாமிபுதூர், வ.உ.சி.நகர், தாதம்பட்டி காலனி பகுதி மக்கள் கடந்த ஆறு மாதங்களாக போராடி வருகின்றனர். இதுபற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். 

எனவே, சேலம் - விருத்தாசலம் இரயில்வே பாதையில் தாதம்பட்டி பகுதியில் சுரங்கபாதை அமைக்காமல், ஆளுள்ள இரயில்வே கேட் அமைத்து கொடுக்க வேண்டும். 

அவ்வாறு இல்லாவிட்டால் வருகிற 15-ஆம் தேதி இரயில் மறியல் போராட்டம் நடத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டுச் செல்வோம்" என்று அவர் தெரிவித்தார்.