Asianet News TamilAsianet News Tamil

அரசு பள்ளியின் தரம் உயரும் என்று பத்து ஆண்டுகளாக காத்திருந்த பெற்றோர்கள் போராட்டம்; 10 நாட்கள் கெடு...

Parents waiting for ten years government school quality will rise
Parents waiting for ten years government school quality will rise
Author
First Published Jul 4, 2018, 7:37 AM IST


கிருஷ்ணகிரி

அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்ப்டும் என்று பத்து ஆண்டுகளாக காத்திருந்த பெற்றோர்கள் மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், இராயக்கோட்டை சாலையில் முல்லை நகர் அருகே அரசு உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. 

கடந்த 2005-ஆம் ஆண்டில் புதிதாக தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் தற்போது 759 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 36 ஆசிரிய, ஆசிரியைகள் வேலைசெய்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் நாகராஜ்.

இந்தப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக பெற்றோர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது. அதற்கு ரூ.2 இலட்சத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பே செலுத்தியுள்ளனர்.  ஆனால், இந்தாண்டும், பள்ளி தரம் உயர்த்தப்படவில்லை. இதனால் மாணவ, மாணவிகளின் பெற்றோர் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்துள்ளனர். 

இதனையடுத்து நேற்று 300-க்கும் மேற்பட்டோர் பள்ளிக்கு திரண்டுவந்து, பள்ளி அருகே உள்ள, மாவட்ட கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு, பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் ஒய்.வி.எஸ்.ரெட்டி தலைமை வகித்தார். துணைத் தலைவர் பூங்காவனம், பொருளாளர் சீனிவாச ரெட்டி மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் குமார், ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தப் போராட்டத்தின்போது, அரசை வலியுறுத்தி பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், இன்னும் 10 நாட்களுக்குள் இப்பள்ளி, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட வேண்டும். 

அப்படி செய்யாவிட்டால் பெற்றோர்கள் சார்பில் சாலை மறியல் மற்றும் உண்ணாவிரதம் போன்ற தீவிர போராட்டங்கள் நடத்தப்படும் என்று பெற்றோர் தெரிவித்தனர். இந்தப் முற்றுகை போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios