பள்ளி நிர்வாகிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டேன் என்று உயிரிழந்த பள்ளி மாணவனின் பெற்றொர் தெரிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்குபின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

பள்ளி நிர்வாகிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டேன் என்று உயிரிழந்த பள்ளி மாணவனின் பெற்றொர் தெரிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்குபின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகன் தீக்சித் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம் போல், மாணவர் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளார். வேனில் இருந்து மற்ற மாணவர்கள் இறங்கி சென்றபோது, வேனில் தீக்சித் தனது பையை வைத்துவிட்டு இறங்கி வகுப்பரைக்கு சென்றுள்ளார். பின்னர் பையை வேனில் வைத்துவிட்டு வந்ததை அறிந்த தீக்சித் அதனை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி திரும்பி சென்றுள்ளார் அப்போது வேனை நிறுத்துவதற்காக வேன் ஓட்டுநர் பூங்காவனம் வேனை ரிவர்ஸ் எடுத்துள்ளார்.

இதனால், வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்து வேனில் சிக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவர் தீக்சித் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுக்கும் அவரது பெற்றோர், பள்ளி நிர்வாகிகளை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னுடைய மகன் காலை 8.30 மணிக்கு பள்ளிக்கு வேனில் சென்றார். அடுத்த 10 நிமிடங்களில் என் மகனுக்கு விபத்து நடைபெற்றதாக தொலைப்பேசி அழைப்பு வந்தது. அத்துடன் ஒரு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கூறியிருந்தனர். அங்குச் சென்ற பார்த்தபோது அவன் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறான் என்று தெரிவித்தனர். அதன்பின்பு என்னுடைய மகன் இறந்துவிட்டான் என்று தெரிவித்தனர்.

இன்று காலை அவன் வெள்ளை சட்டை அணிந்து சென்றான். அந்தச் சட்டை முழுவதும் இரத்தக்கறை படிந்துள்ளது. 7 வயது மகன் இப்படி இறந்துள்ளது எங்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. என்னுடைய மகனிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக இதுவரை யாரும் சரியாக தெரிவிக்கவில்லை. அவன் லஞ்சு பேக்கை விட்டு மீண்டும் எடுக்க சென்ற போது இந்த விபத்து நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் யாரும் இதுவரை தெளிவாக கூறவில்லை. அந்தப் பள்ளியின் தாளாளரை கைது செய்தால் மட்டுமே என்னுடைய மகனின் உடலை வாங்க முடியும். அதற்கு எவ்வளவு நாளாகினாலும் பரவாயில்லை என்று தெரிவித்தார். இதை அடுத்து சிறிவனின் பெற்றோரிடம் மத்திய சென்னை கோட்டாட்சியர் இளங்கோவன், மயிலாப்பூர் வட்டாட்சியர் நந்தினி பேச்சுவார்த்தை நடத்தினர். இதை அடுத்து மாணவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.