வங்க கடலில் உருவான, 'கஜா' புயல் கடந்த மாதம்  15 ஆம் தேதி நள்ளிரவு  டெல்டா மாவட்டங்கள் வழியே கரை கடந்தது. அதனால், டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, மீள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

புயல் தாக்கி, ஒரு மாதம் கூட முடியாத நிலையில், வங்க கடலை ஒட்டிய, இந்திய பெருங்கடலில், புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை கடந்த  9ம் தேதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது, நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இன்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை, தீவிர காற்றழுத்த மண்டலமாகவும் மாறும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி, 14ம் தேதி முதல், தமிழக கடற்பகுதியை நோக்கி நகர துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, டிசம்பர் 6 ஆம் தேதி முதல்  தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. அதேநேரம், புயல் சின்னம், தமிழக பகுதியை நெருங்கும்போது, கன மழை கொட்டும் என கூறப்பட்டுள்ளது..


வரும், 15ம் தேதி, தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திர கடற்பகுதிகளில், கன மழை பெய்யும் என, கூறப்பட்டு உள்ளது. எனவே, தமிழகம் மற்றும் ஆந்திர பகுதிகளை, மஞ்சள் குறியீட்டில், இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 16ம் தேதி, தமிழக வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் ஆந்திராவின் தெற்கு பகுதிகள் வழியே, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்றும், வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருவதால், அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். கடல் சீற்றமாக இருக்கும்; 13 அடி வரை, அலைகள் உயரும். மணிக்கு, 60 கி.மீ., வேகத்தில், சூறாவளி காற்று வீசும் என, இந்திய கடல் தகவல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் பேசும்போது, இன்று முதல், 15ம் தேதி வரை, வங்க கடலின் மத்திய தெற்கு, தென் கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிக்குள், மீனவர்கள் செல்ல வேண்டாம். ஆழ்கடலில் இருப்பவர்கள், இன்று மாலைக்குள், கரை திரும்ப வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்..

காற்றழுத்த தாழ்வு பகுதி, இரண்டு நாட்களில், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.அதன் தீவிரத்தை கண்காணித்து வருகிறோம். தமிழக வட மாவட்டங்கள் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே, காற்றழுத்த தாழ்வு மண்டலம், கரையை கடக்கும் என புவுயரசன் கூறியுள்ளார்.