Asianet News TamilAsianet News Tamil

மழையில் நனைந்து வீணாகும் நெல்மூட்டைகள்… தஞ்சையில் தொடரும் அவலம்!!

தஞ்சையில் விவசாயிகள் கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல், கொள்முதல் நிலையங்களில் முளைத்து சேதமடைந்து வீணாகி வருவதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். 

paddy starting to grow in bundles in thanjavur
Author
Thanjavur, First Published Nov 26, 2021, 7:27 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தஞ்சையில் விவசாயிகள் கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல், கொள்முதல் நிலையங்களில் முளைத்து சேதமடைந்து வீணாகி வருவதை கண்டு விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். தஞ்சையில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகங்களிலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகள் விளைவித்த நெல்லை, தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.50 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு சந்தை பருவத்தில் 10.54 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இதையடுத்து தற்போதைய சந்தை பருவத்தில் தற்போது வரை 1.95 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அனைத்தையும் உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள தனியார் அரவை மில்லுக்கு அனுப்பி, அந்த அரிசியை பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 350 கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மாவட்டத்தில் உள்ள 5 நிரந்தர சேமிப்பு கிடங்குகள் மற்றும் 24 திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் அதிக அளவில் இருப்பதால், நவம்பர் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அந்தந்த கொள்முதல் நிலையங்களிலேயே தேங்கியுள்ளது.

paddy starting to grow in bundles in thanjavur

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையினால், அங்கு போதிய பாதுகாப்பு இல்லாத காரணத்தால் மாவட்டம் முழுவதும் உள்ள 50க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நெல் மூட்டைகளில் உள்ள நெல் மணிகள் பதறாகி, வீணாகி விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விவசாயிகள் கடன் வாங்கி, கஷ்டப்பட்டு சாகுபடி செய்த நெல்லை, கொள்முதல் நிலையங்களில் சேதமடைந்தும், முளைத்து வீணாகி வருவதை பார்த்து விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.

paddy starting to grow in bundles in thanjavur

இதுகுறித்து பேசிய கொள்முதல் பணியாளர்கள், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சேமிப்பு கிடங்குகளிலும் நெல்மூட்டைகள் நிரம்பியுள்ளது என்றும் மழை பெய்து வருவதால் வெளி மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகளை அனுப்ப முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் கடந்தாண்டு எதிர்பார்த்ததை விட அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டாலும், இருப்பு வைக்க இடமில்லை என்று கூறிய அவர், இதன் காரணமாக நவம்பர் மாதத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அந்தந்த கொள்முதல் நிலையத்திலேயே தேங்கியுள்ளதாகவும் மழையினால் அந்த மூட்டைகளும் சேதமடைந்து முளைக்கத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் ஏற்படும் எடை இழப்பு, சேதாரம் ஆகியவறுக்கு பருவகால பணியாளர்களிடம் அபராதமாக வசூலிக்கப்படும் என்பதால் பணியார்கள் கலக்கத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios