கோவை பெரியதாடகம் பகுதியில் சுற்றிதிரியும் விநாயகன் என்ற காட்டு யானை, அங்குள்ள வயல்வெளிக்கு சென்று விவசாய நிலங்களில் உள்ள பயிர்களை மிதித்து சேதப்படுத்தியது 

மக்களின் நடமாட்டம் உள்ள பகுதியில் கூட காட்டு யானை வந்து மக்களை தொடர்ந்து பயமுறுத்தி வந்தது.இந்த நிலையில் யானையை பிடிக்க கும்கி யானையை  கொண்டு முயற்சி செய்யப்பட்டு தற்போது முதுமலை  சரணாலயத்திற்கு கொண்டு செல்லப் படுகிறது 

இதற்காக கும்கி யானைகள் சேரன், விஜய், பொம்மன், வசீம் ஆகிய 4 கும்கி யானைகள் காட்டு யானையை பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. காட்டு யானைக்கு வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர்  மயக்க ஊசி செலுத்தினர். பின்னர் யானையை கும்கிகள் மூலமாக முதுமலை கொண்டு செல்ல பணிகள் நடைபெற்று வருகிறது.

இது குறித்து, கோவை மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் தீபக் ஸ்ரீ வஸ்த்தவா தெரிவிக்கும் போது, 

கோவையில் காட்டு யானையை பிடிக்கும் நிகழ்விற்கு 'ஆப்ரேசன் விநாயகா" என்று பெயரிடப்பட்டுள்ளது. காட்டு யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும், காட்டு யானையை  கொண்டு செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு கோவை, நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளர்களிடம்  வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர  மேலும்  கோவை தடாகம் பகுதியில் சின்னத்தம்பி என்ற யானை, சுற்றி திரிந்து வருகிறது. சின்னத்தம்பி யானையையும் கண்காணித்து வருகிறோம்.பிடிபட்டால் அந்த யானையையும் முதுமலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்து உள்ளார்