ஊட்டியில் மீண்டும் வெளுத்து வாங்கும் மழை !! கடுங்குளிரில் நடுங்கும் சுற்றுலாப் பயணிகள் !!
ஊட்டியில் மீண்டும் கனமழை கொட்டி வரவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்துள்ளனர்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் கனமழை பெய்தது. இந்தியாவில் 2-வது சிரபுஞ்சி என அழைக்கப்படும் அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையின்போது அவலாஞ்சி மின்நிலைய குடியிருப்பில் வசித்து வந்த 91 பேர் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.
அவர்களில் 6 பேர் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். பலத்த மழைக்கு நீலகிரி மாவட்டம் துண்டிக்கப்பட்டது. ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. மண் அரிப்பு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. சில சமயங்களில் கன மழையும் பெய்கிறது. கூடலூர், தேவாலா ஆகிய பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அவலாஞ்சி, எமரால்டு, அப்பர் பவானி போன்ற நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்கிறது.
ஊட்டியில் இன்று காலை மேகமூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. மழை காரணமாக ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
இதனால் காலை நேரங்களில் சுற்றுலா தலங்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. அதிகாலை நேரங்களில் கடும் மேக மூட்டம் காணப்படுவதால் வாகனங்களை இயக்க முடியாமல் அதன் ஓட்டுனர்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.