கோயம்புத்தூர்
 
கோயம்புத்தூரில் குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட உள்ள டாஸ்மாக் சாராயக் கடை திறக்க கூடாது என்று பொதுமக்களும்,  சாராயக் கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பு கேட்டும் ஆட்சியரிடத்தில் மனு கொடுக்கபப்ட்டது. 

கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் ஹரிகரன் தலைமை வகித்தார். 

இதில் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்தக் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் தங்கவேலு, கிளை செயலாளர் சந்திரன், தி.மு.க.வை சேர்ந்த பன்னீர், குணசேகரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து ஆட்சியர் மனு ஒன்று கொடுத்தனர். 

அந்த மனுவில், "கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பி.என்.புதூர் சென்னிமலை ஆண்டவர் நகரில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. தற்போது குடியிருப்பு பகுதியில் புதிய டாஸ்மாக் சாராயக் கடை திறப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இங்கு சாராயக் கடை திறக்கப்பட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். மேலும் பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டு தேவையற்ற அசம்பாவிதங்கள் நிகழும். 

மேலும் சாராயக் கடை திறக்கப்பட உள்ள இடத்தின் அருகே மைதானம் உள்ளது. இங்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர். இங்கு சாராயக் கடை திறக்கப்பட்டால் இவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. 

எனவே, பொதுமக்களின் நலன் கருதி இங்கு டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது" என்று அதில் கூறியிருந்தனர். 

இவர்கள் மனு கொடுத்துவிட்டு சென்ற பிறகு அங்கு வந்த டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில் ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், "வீரகேரளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடை ஊழியர்கள் மீது சிலர் கடந்த மாதம் 30-ஆம் தேதி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் பதிவு செய்யப்பட்டும் குற்றவாளி கைது செய்யப்படவில்லை.

டாஸ்மாக் சாராயக் கடையுடன் இணைந்த பார்களின் உரிமையாளர்கள் சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்கின்றனர். இதனை எதிர்க்கும் சாராயக் கடை ஊழியர்கள் மீது சில நபர்களை தூண்டிவிட்டு தாக்குதல் நடத்துகின்றனர். 

எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும் டாஸ்மாக் பார்களின் உரிமையை ரத்து செய்வதோடு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பும் வழங்க வேண்டும்" என்று அதில் கூறியிருந்தனர். 

மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.