தீபாவளிக்கு பட்டாசை புஸ்ஸாக்க வரும் மழை!  வானிலை ஆய்வு மையம் தகவல்!

தீபாவளி தினம் அன்று, தென் தமிழகத்தில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

பொதுவாக தீபாவளியன்று சில இடங்களில் மிதமான மழை பெய்வது வழக்கம் தான், அந்த மழையில் கூட குழந்தைகள் பட்டாசு வெடிப்பதை நிறுத்த மாட்டார்கள். ஆனால் இந்த தீபாவளிக்கு மழை வலுக்கும் என கூறியுள்ளதால் குழைந்தைகள் பட்டாசு கனவே புஸ்ஸாகிவிடும் என தெரிகிறது.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை வலுப்பெறக்கூடும் என தெரிவித்தார்.

மேலும், மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள், நவம்பர் 6ஆம் தேதிக்கு முன்னர் கரை திரும்ப வேண்டும் என்றும் பாலச்சந்திரன் வலியுறுத்தினார். 

இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 6 ஆம் தேதி தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் தென் தமிழகம் மற்றும் தெற்கு கேரளாவின் ஒரு சில  இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.