மாணவன் உயிரிழப்புக்கு காரணமான வளசரவாக்கம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மாணவன் உயிரிழப்புக்கு காரணமான வளசரவாக்கம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னை வளசரவாக்கம் அருகே ஆழ்வார்திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்குலேசன் தனியார் பள்ளியில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வெற்றிவேல் என்பவரது மகன் தீக்சித் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று வழக்கம் போல், மாணவர் தீக்சித் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றுள்ளார். வேனில் இருந்து மற்ற மாணவர்கள் இறங்கி சென்றபோது, வேனில் தீக்சித் தனது பையை வைத்துவிட்டு இறங்கி வகுப்பரைக்கு சென்றுள்ளார். பின்னர் பையை வேனில் வைத்துவிட்டு வந்ததை அறிந்த தீக்சித் அதனை எடுப்பதற்காக பள்ளி வேனை நோக்கி திரும்பி சென்றுள்ளார் அப்போது வேனை நிறுத்துவதற்காக வேன் ஓட்டுநர் பூங்காவனம் வேனை ரிவர்ஸ் எடுத்துள்ளார்.

இதனால், வேனில் ஏற முயற்சித்த மாணவர் தீக்சித் தவறி கீழே விழுந்து வேனில் சிக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவர் தீக்சித் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவர் தீக்சித் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ஜெயசுபாஷ், பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி, வேன் ஓட்டுநர் பூங்காவனம், குழந்தை கவனிப்பாளர் ஞானசக்தி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, மாணவன் உயிரிழப்புக்கு காரணமான வளசரவாக்கம் வெங்கடேஸ்வரா மெட்ரிக் பள்ளிக்கு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இயக்கப்படும் பேருந்துகளுக்கு தனியாக பணியாளர் நியமனம் செய்யாதது ஏன்? 64 வயது முதியவரை ஓட்டுனராக நியமித்தது ஏன்? பள்ளி வாகனத்தில் இருந்து மாணவர்கள் இறங்கி சென்று விட்டார்களா என்பதை பள்ளி முதல்வர் உறுதி செய்யாதது ஏன்? பள்ளி தாளாளர் விபத்து நடைபெற்ற தகவல் கிடைத்தும் பிற்பகல் வரை பள்ளிக்கு வருகை புரியாதது ஏன் என்பது குறித்தும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளிக்க உத்தரவுடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் நோட்டீசுக்கு நேரடியாக பள்ளி நிர்வாகம் பதில் அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ் உத்தரவிட்டுள்ளார்.