நக்கீரன் வார இதழ் அலுவலக ஊரியர்களைக் கைது செய்ய மாட்டோம் என்று ஜாம்பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர், சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளார்.

நக்கீரன் வார இதழில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி துணை பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை ஒன்று வெளியானது. அந்த கட்டுரையில், பேராசிரியை நிர்மலா, தான் 4 முறை ஆளுநரை சந்தித்ததாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. தொடர்ந்து ஆளுநர் மீது அவதூறு கூறும் வகையில் நக்கீரன் இதழில் செய்திகள் வெளிவந்த நிலையில், அதன் ஆசிரியர் கோபால் மீது ஆளுநர் மாளிகை தரப்பு புகார் அளித்தது.

இந்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேசதுரோக வழக்கும் போடப்பட்டது. கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் பின்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை ரிமாண்ட் செய்ய முடியாது என்று எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மறுத்தார். இதைடுத்து, நக்கீரன் கோபால் சொந்த ஜாமினில் வெளியே வந்தார். இதனிடையே, நக்கீரன் இதழில் பணிபுரிபவர்கள், முன்ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். நக்கீரன் அலுவலக ஊழியர்கள் கைது செய்யப்படும் என்ற தகவல் காரணமாக அவர்கள் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாம்பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆஜரான வழக்கறிஞர், நக்கீரன் இதழ் அலுவலக ஊழியர்களை கைது செய்ய மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார். ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் 124 பிரிவின்கீழ் எப்படி வழக்கு பதிய முடியும்? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 35 பேரின் முன் ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை வரும் அக்டோபர் 25 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.