அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. எனவே, அக்டோபர் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்,  அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் புயல் சின்னம் உருவானதால் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்படவில்லை. வங்கக் கடலில் திடீரென உருவான டிட்லி புயல் இன்று அதிகாலை ஒரிசா- ஆந்திரா இடையே கரையைக் கடந்தது.

இந்தப் புயல் இரு மாநிலங்களிலும் சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. ஆந்திராவில் 8 க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்தனர். ஒடிசாவில் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட 3 மாவட்டங்களில் இருந்து பொது மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே  இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15-ம் தேதிக்கு பிறகு தொடங்க வாயப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதே நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.