கடந்த மே மாத இறுதியில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. இது தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழையைக் கொடுத்தது. பிற பகுதிகளில் மழை பெய்யவில்லை.

ஆனால் கேரளாவில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்தது. 30 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. 300 க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்தனர், இதே போல் கர்நாடகாவில் பெய்த கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. இதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணை 4 முறை நிரம்பி வழிந்தது.

இந்நிலையில் தென்  மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதையடுத்து இன்று முதல் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம்  அதிரடியாக அறிவித்துள்ளது.

இதையொட்டி வங்க கடலின் தென் கிழக்கு பகுதியில் சென்னைக்கு கிழக்கே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது புயலாக மாறுவதற்கு 70 சதவீதம் சாத்தியம் உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினாலும் காற்றழுத்த மண்டலமாகவே நீடித்தாலும் ஆந்திராவின் வடக்கு கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசாவுக்கு தான் கன மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் வரும் 14ம் தேதி வரை சென்னையில் மிதமான மழை மட்டுமே இருக்கும் என்றும் ஆனால் அடுத்த வாரம் முதல் சென்னையில் கனமழை பெய்யத் தொடங்கும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நள்ளிரவு ஒரு மணி முதல் அதிகாலை வரை இடி,மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது