வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு ஊதியம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்சார திருத்தச் சட்டத்தைத் திரும்ப பெறுதல், தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுதல், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குதலை கைவிடுதல் உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28, 29 ஆகிய தேதிகளில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் 28 மற்றும் 29 ஆம் தேதி அகில இந்திய அளவில் பொது வேலைநிறுத்தத்தின் போது போக்குவரத்து கழக ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துறைவாரியாக தனித்தனியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பல்வேறு மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள உத்தேச அகில இந்திய வேலைநிறுத்தத்தில் 28.3.2022 மற்றும் 29.3.2022 ஆகிய தேதிகளில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்திலுள்ள அங்கீகரிக்கப்படாத சேவை சங்கத்தின் உறுப்பினர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அரசு ஊழியர்கள் 28, 29 ஆம் தேதி பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது, அன்றைய தினங்களில் பணிக்கு வந்த, வராதவர்கள் பற்றிய தகவல்கள் துறை வாரியாக காலை 10.30 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டம் அல்லது வேறு ஏதேனும் போராட்டங்களில் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிக்கும், விதிகள் 20-ஐ மீறுவதாகும் என்பதை சுட்டிக்காட்டி, 1973 தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின் 22 மற்றும் 22A படி, வேலை இல்லை - ஊதியம் இல்லை என்ற கொள்கையின் அடிப்படையில் ஊதியம் மற்றும் படிகளுக்கு உரிமை இல்லை. உத்தேச வேலைநிறுத்தத்தின் நாட்களில் சாதாரண விடுப்பு அல்லது மருத்துவ விடுப்பு தவிர வேறு ஏதேனும் விடுப்புக்கான விண்ணப்பம் அனுமதிக்கப்படாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
