நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 20 பேர் வரை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி வழங்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 20 பேர் வரை வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி வழங்கி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இதனால் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளதுடன், பணப்படுவாடாவை தடுக்க 45 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இறுதி வேட்பாளர் பட்டியல் வருகிற 7 ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவுள்ளது. அத்துடன் வேட்பாளர்கள் அதிகபட்சமாக 3 ஆதரவாளர்களுடன் சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட வேண்டும். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட கூடாது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதில், வீடு வீடாக சென்று பரப்புரை மேற்கொள்ள 20 நபர்கள் வரை அனுமதி, திறந்தவெளி மைதானங்களில் 1000 நபர்கள் வரையும் அல்லது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 50% என இதில் எது குறைவான எண்ணிக்கையோ அந்த அளவில் பரப்புரை கூட்டம் நடத்த அனுமதி, கொரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதேசமயம் கூட்டம் நடப்பதற்கு முன் அனுமதி பெறும் கட்டுப்பாடு தொடர்கிறது என்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு இன்று வரை 194 புகார்கள் வந்துள்ளது என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சென்னையில் 1243 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நாளன்று 18 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.