தற்போது தமிழக காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக இருக்கும் டி.கே.ராஜேந்திரனை மாற்றிவிட்டு புதிய டி.ஜி.பியாக சென்னை காவல் ஆணையராக இருக்கும் ஏ.கே.விஸ்வநாதனை நியமிப்பதற்கான ஆலோசனை துவங்கியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு சென்னை காவல்துறையின் ஆணையராக இருந்த டி.கே.ராஜேந்திரனிடம் காவல்துறை டி.ஜி.பி பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. சுமார் ஓராண்டு காலம் தமிழகத்திற்கு என்று முழு நேர டி.ஜி.பி இல்லாமல் இருந்தது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜுலை மாதம் 1ந் தேதி பணி ஓய்வு பெற இருந்த டி.கே.ராஜேந்திரனுக்கு இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அதுமட்டும் இன்றி தமிழக டி.ஜி.பியாக முழு நேரமாகவும் டி.கே.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டார். சுமார் ஓராண்டு காலமாக தமிழகத்தின் டி.ஜி.பியாக ராஜேந்திரன் செயல்பட்டு வருகிறார். இவர் சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த போது அதாவது கடந்த 2016 கால கட்டத்தில் குட்கா உரிமையாளர் மாதவராவிடம் சுமார் 30 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றதாக வருமான வரித்துறை தமிழக அரசுக்கு அந்த ஆண்டே கடிதம் எழுதியது.

ஆனால் ராஜேந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து தற்போது சி.பி.ஐ விசாரணையின் போது தான் டி.கே.ராஜேந்திரன் வீட்டுக்கும் அதிகாரிகள் சோதனைக்கு சென்றனர். சுமார் ஒன்பது மணி நேரம் ராஜேந்திரன் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அத்துடன் சோதனையின் போது கிடைத்த சில ஆதாரங்களை தொகுத்துள்ள சி.பி.ஐ அதிகாரிகள் விரைவில் டி.ஜி.பி ராஜேந்திரனை டெல்லிக்கு விசாரணைக்கு அழைக்கும் என்று கூறப்படுகிறது.

அதற்கு முன்னதாகவே ராஜேந்திரன் பதவியை பறிக்கும் முடிவில் தமிழக அரசு உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தின் டிஜிபியாக ராஜேந்திரன் விசாரணைக்கு ஆஜராகும் போது கைது செய்யப்பட்டால் தர்மசங்கடமான நிலை ஏற்படும் என்று தமிக அரசு கருதுகிறது. மேலும் தமிழக தலைமைச் செயலாளராக ராம மோகனராவ் இருந்த போது வருமான வரித்துறை சோதனைக்கு ஆளானதால் அவர் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதே பாணியில் ராஜேந்திரனை பணியிடமாற்றம் செய்ய முடியாது. ஏனென்றால் தற்போது பதவிக்கால நீட்டிப்பில் ராஜேந்திரன் உள்ளார். எனவே அவரை டி.ஜி.பி பதவியில் இருந்து தமிழக அரசு எந்த நேரமும் விடுவிக்கும் என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தற்போது சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவிக்கு தகுதியான மூன்று பேரை தேர்வு செய்து மத்திய தேர்வாணையத்திற்கு தமிழக அரசு அனுப்பும். அவர்களில் ஒருவர் தமிழக டி.ஜி.பி ஆவார்.,


 இதனிடையே தற்போது சென்னை காவல்துறையில் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரி ஒருவர் ஏ.டி.ஜி.பி ரேங்கில் உள்ளார். எந்த சர்ச்சையிலும் சிக்காத அவருக்கு உடனடியாக டி.ஜி.பியாக பதவி உயர்வு வழங்கி சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக்கலாமா? என்றும் தமிழக அரசு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு சீனியர் அதிகாரிகள் ஒப்புக் கொள்வார்களா? நீதிமன்றம் செல்வார்களா? என்றும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.