தென்மேற்கு பருவமழை அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் தீவிரம் அடைந்து வருகிறது. கன்னியாகுமரி முதல் குஜராத் வரை அரபிக்கடல் பகுதியிலும், அந்தமான் முதல் மேற்கு வங்கம் வரை வங்கக்கடல் பகுதியிலும், தென்மேற்கு பருவமழை பரவியுள்ளது. 

தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, நீலகிரி, கோவை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் பருவ மழை பெய்கிறது. மற்ற இடங்களில் லேசான தூரலும், வெயிலும் நிலவுகிறது.

இந்நிலையில் நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, வேலுார், விழுப்புரம், கடலுார், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை முதல் மழை பெய்து வருகிறது.

இதனிடையே வங்க கடல் பகுதியில் வரும் 30 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலால் வரும் 1 ஆம் தேதி சென்னையில் கனமழை இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சென்னையில் தற்போது பல இடங்களில் மழை பெய்து வருவது, தண்ணீர் பற்றாக்குறையில் இருந்து மீளும் என எதிர்பார்க்கப்படுகிறது.