தமிழகத்தில் பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகளை ஆங்கில பள்ளிகளிலோ  ‛கிட்ஸ் ஸ்கூல்'களிலோ தான் சேர்க்கின்றனர். நடுத்தர மற்றும் ஏழை,எளிய வீட்டு  குழந்தைகள்தான் அங்கன்வாடிகளுக்கு வருகின்றனர். அனைத்து தரப்பு குழந்தைகளும் அங்கன்வாடி மையங்களுக்கு வரவேண்டும் என்பதற்காக புதிய பாடத்திட்டங்கள், உணவுமுறைகள், நர்சரி பள்ளியை போல சீருடை போன்றவை வழங்கப்படுகிறது.  ஆனாலும் இன்று வரை அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் குறைவாகவே உள்ளனர்.

இந்நிலையில்தான் நெல்லை மாவ்டட ஆட்சியர் தன மகளை அங்கன்வாடியில் சேர்த்து விட்டு பாராட்டைப் பெற்றுள்ளார்.
நெல்லை மாவட்ட ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு பிரச்சனைக்குப் பின் அங்கு மாற்றப்பட்டார். அப்போது நெல்லை மாவட்ட ஆட்சியராக ஷில்பா பிரபாகர் நியமிக்கப்பட்டார். அவர் கலெக்டராக றியமிக்கப்பட்டதில் இருந்து பல அதிரடி நடவடிக்கைகள் மூலம் பொது மக்களின் பாராட்டடைப் பெற்று வருகிறார்.

செங்கோட்டை விநாயகர் சதுர்த்தி பிரச்னையை சுமூகமாக கையாண்டு அங்கு விரைவில் அமைதியைச் திரும்பச் செய்ததில், ஷில்பாவின் பணி பாராட்டத்தக்கதாக இருந்தது.

இந்நிலையில், தனது மூன்று வயது மகள் கீதாஞ்சலியை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் ஷில்பா சேர்த்துள்ளார். மற்ற மாணவர்களுடன் தரையில் அமர்ந்து பாடங்களை கற்கும் கீதாஞ்சலி, தவறாமல் தினமும் ஆர்வத்துடன் வருவதாக அங்கன்வாடி மைய காப்பாளர் கூறுகிறார்.

மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாவட்ட ஆட்சியரே தனது மகளை அரசு அங்கன்வாடி மையத்தில் சேர்த்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.