ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பாப்பனம் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. அவருடைய மூத்த மகள் சந்தியா. மாற்றுத்திறனாளியான  இவர் அபிராமத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். டாக்டராக விரும்பிய சந்தியா, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். மதுரை திருப்பாலையில் ஒரு மையத்தில் அவர் நேற்று ‘நீட்’ தேர்வு எழுதினார்.

இதற்காக வீட்டில் இருந்து அதிகாலை 4 மணிக்கே புறப்பட்டு வந்தார். அவருடன் தந்தை முனியசாமியும் வந்திருந்தார். மாணவி சந்தியா உணவு சரியாக சாப்பிடவில்லை என கூறப்படுகிறது. தேர்வு மையத்திலேயே அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது.

தேர்வு முடிந்து வெளியே வந்த பின்பும் அவர் சரியாக சாப்பிடாமல் ஊருக்கு பஸ்சில் புறப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் சென்ற போது, சந்தியா மீண்டும் ஓடும் பஸ்சில் மயங்கி உள்ளார். 

உடனே அவரை திருப்புவனம் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டது. ஆனாலும் சந்தியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் உடனடியாக மேல்சிகிச்சைக்காக இரவில் அவர் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, சந்தியா ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.

அவரது உடலை பார்த்து தந்தை முனியசாமி கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அரசு மருத்துவமனை  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நீட் தேர்வு எழுத வந்த மாணவி ஊர்திரும்பும் வழியில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.