அரசு எந்த சட்டம் போட்டாலும் மக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே வெற்றிபெறும் என்ற சொல்லுக்கு ஏற்றவாறு கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சி மாமிச கடைகள் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனையொட்டி கடலூர் மாவட்டம் கிள்ளை பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு முன் உதாரணமாக இறைச்சிக் கடைகளில் பனை ஓலையில் மாமிசத்தை பொட்டலம் கட்டி தரும் பழமையான நிலைக்கு இறைச்சிக் கடைகாரர்கள் மாறியுள்ளனர்.

இந்த பொட்டலங்களை பிச்சாவரத்திற்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன், அதற்கான விளக்கத்தை கேட்டறிந்து, கடை உரிமையாளர்களை பாராட்டி செல்பி எடுத்துக் கொண்டு, நினைவு பரிசும் வழங்கிச்சென்றனர்.

கிள்ளை பேரூராட்சி ஊழியர்கள் கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி வருகின்றனர். அதையடுத்து கிள்ளை பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் கவர்களை முற்றிலும் தவித்துள்ளனர்.

இதனால் நுகர்வோர்கள் துணிப்பை கொண்டு வந்து பொருட்கள் வாங்கிச் செல்லும் நிலைக்கு மாறியுள்ளனர். மேலும் ஓட்டல்களில் பாத்திரங்களில் உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர். காலை மற்றும் இரவு நேர சிற்றுண்டிகளில் வாழை இலை, சருகு, மந்தாரை, தாமரை இலையை பயன் படுத்துகின்றனர்.

இத்தகவல் சமூக வலை தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது. இதனையறிந்த சுகாதாரத்துறையினர், பேரூராட்சி நிர்வாக ஊழியர்கள் மற்றும் உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகளும் இறைச் சிக்கடையினருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

பிளாஸ்டிக்கை ஒழிக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முதல் ஆரதவு குரல் கிள்ளை பேருராட்சியில் இருந்து எழுந்துள்ளது. இதே போன்று தமிழகம் முழுவதும் ஒரு எழுச்சி ஏற்பட்டால் பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை உருவாக்க முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.