சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ‘‘முருகன் இட்லி கடை’’ என்ற பெயரில் 27 கிளைகளுடன் ஓட்டல் இயங்கி வருகிறது. சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த ஓட்டலின் கிளைகள் உள்ளன.

இந்நிலையில் சென்னை ஆதம்பாக்கம், என்.ஜி.ஒ காலனி பகுதியை சேர்ந்த உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரபாகரன், பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடையில் மதிய உணவு சாப்பிட சென்றார் அப்போது,  அங்கு சாப்பாட்டில் புழு இருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து அவர் உணவக மேலாளரிடம் புகார் கூறிய போது சரிவர பதில் அளிக்காமல், அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். இதனையடுத்து வழக்கறிஞர் பிரபாகர் ‘வாட்ஸ்அப் செயலி’ மூலம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தார். 

இதனையடுத்து, அந்த கடையை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பூச்சி  தடுப்பு நடவடிக்கை இல்லை என்பதும் உணவு பறிமாறும் ஊழியர்களுக்கு தகுந்த மருத்துவ சான்றிதழ் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது

மேலும் சென்னையில் உள்ள 27 கிளைகளுக்கு உணவுகளை சப்ளை செய்யும் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முருகன் இட்லி கடையில் சுகாதாரமின்றி உணவு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.  மேலும் பாதுகாப்பு சட்டத்தை முறையாக பின்பற்றாமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

முருகன் இட்லிக்கடையில் சாப்பாட்டில் புழு இருந்ததும், தரமற்ற, சுதாகாதாரமில்லாத உணவுகளை தயாரித்து வழங்கியதும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.