விழுப்புரம் அருகே 2 குழந்தைகளை அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கடித்து கொன்றுவிட்டு தலைமறைவான தாயை, போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் கட்டமுத்து புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவரது மனைவி ஜெயசித்ரா. இவர்களுக்கு 4 வயதில் மிதுன், 7 மாதத்தில் லக்ஷன் ஆகிய குழந்தைகள் இருந்தன.

கடந்த சில மாதங்களுக்கு முன் 7 மாத குழந்தை லக்ஷன், அண்டாவில் இருந்த தண்ணீரில் விழுந்து இறந்தான். இதையடுத்து சிலம்பரசன், மனைவி மற்றும் மற்றொரு மகனுடன், பனங்குப்பத்துக்கு குடியேறினார்.

இந்த வேளையில், கடந்த வியாழக்கிழமை, 4 வயது மகன் மிதுனின் உடல் வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக கிடந்தது. அதன்பின்னர் ஜெயசித்ரா மாயமானார்.

இதுதொடர்பாக வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, 2 குழந்தைகளையும் ஜெயசித்ரா கொலை செய்தாரா என சந்தேகம் எழுந்தது.  இதையடுத்து அவரை, போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில், மேல்மருவத்தூரில் ஜெயச்சித்ரா இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று, அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில், குழந்தைகள் 2 பேரையும் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றதாக ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அதற்கான காரணம் தனக்கே தெரியவில்லை என வாக்குமூலம் அளித்த்தாக கூறினர்.