கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே அரசு பஸ்சின் பின்புறம், கார் மோதிய விபத்தில், அமைச்சர் ஜெயக்குமாரின் முன்னாள் உதவியாளர், அவரது 2 மகன்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தமிழக அமைச்சர் ஜெயக்குமாரிடம் உதவியாளராக இருந்தவர் லோகநாதன். இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு சிவராமன், ரித்திஷ்குமார், ரக்ஷன் ஆகிய மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை லோகநாதன், தனது சொந்த ஊரில் தீபாவளி பண்டிகை கொண்டாட குடும்பத்துடன் காரில் புறப்பட்டார். காரை லோகநாதன் ஓட்டி சென்றார். அருகில் மகன்கள் சிவராமனும், பின் சீட்டில் ஷாலினி, ரக்ஷன், ரித்திஷ்குமார் ஆகியோர் உட்கார்ந்து சென்றனர்.

கடலூர் மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வேப்பூர் அருகே சென்றபோது, முன்னால் கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பஸ், ஐவதுகுடி என்ற பகுதியில் திடீரென இடதுபுறம் திரும்பியது.

அப்போது இன்டிகேட்டரை போடாமல் திரும்பியதால், லோகநாதன் சென்ற கார், நிலைதடுமாறி பஸ்சின் பின்புறம் பயங்கரமாக மோதி நொறுங்கியது.

இதில் லோகநாதன், சிவராமன், ரித்திஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். ஷாலினி படுகாயமடைந்தார். சிறுவன் ரக்ஷன் காயமின்றி உயிர்தப்பினான்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், படுகாயமடைந்த ஷாலினியை சிகிச்சைக்காகவும் மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.