மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், பிரபல ரவுடி ஒருவருக்கு பணம் கொடுத்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி பொக்கை சரவணன். இவர் மீது ராயபுரம், வண்ணாரப்பேட்டை, காசிமேடு உள்ளிட்ட காவல்நிலையங்களில், அடிதடி, கொலை மிரட்டல், வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒரு நேரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்த பொக்கை சரவணன், தற்போது ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருகிறார்.பல்வேறு வழக்குகளில் சிக்கி, அடிக்கடி சிறை சென்று வந்த ரவுடி பொக்கை சரவணனை அவரது உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்களும் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது. காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நடக்கக் கூட முடியாமல் தவிக்கும் அவர், திருந்தி வாழ முடிவு செய்து அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்துள்ளார். ரவுடி வாழ்க்கையை கைவிட்டு, சாதாரண வாழ்க்கையை வாழ விரும்புவதாகக் கூறிய அவர், வாழ்வாதாரத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரி, அமைச்சர் ஜெயக்குமாரிடம் மனு அளித்துள்ளார்.அவரது நிலையை பார்த்து, மனம் இளகிபோன அமைச்சர் ஜெயக்குமார், உடனடியாக தனது பாக்கெட்டில் இருந்து ரூ.5,000ஐ எடுத்து, ரவுடி பொக்கை சரவணன் கையில் திணித்தார். ஆனால், அதை வாங்க மறுத்த ரவுடி பொக்கை சரவணன், வாழ்வாதாரத்திற்கு உதவினால்போதும் என கண்ணீர் மல்க கூறினார். இருப்பினும், அவரது கையில் வலுக்கட்டாயமாக பணத்தை திணித்த அமைச்சர் ஜெயக்குமார், சாதாரண வாழ்க்கையை நடத்த, தன்னால் முடிந்த உதவியை செய்வதாக, பொக்கை சரவணனிடம் உறுதி அளித்தார்.இதையடுத்து, பொக்கை சரவணன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் எல்லோரும் அஞ்சி நடுங்கும் வகையில் விளங்கிய பிரபல ரவுடி பொக்கை சரவணன், இன்று ஒருவேளை உணவுக்கு கூட வழியில்லாமல் தவிக்கும் காட்சி, அமைச்சரை மட்டுமின்றி, அங்கிருந்தவர்களையும் உச்சுக்கொட்ட வைத்தது.