கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் கர்நாடகாவின் கேஎஸ்ஆர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் 75,000 கன அடி நீர் வந்துகொண்டிருக்கும் நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. .

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 50,000 கன அடியாக இருந்து வந்த நிலையில் தற்போது 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 117.590 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 86.679 டிஎம்சி ஆகவும் இருக்கிறது. தற்போது அதிகரித்துள்ள நீர்வரத்தால் மேட்டூர் அணை விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

அதனால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அறிவுறுத்தியது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118 அடியாக உயர்ந்துள்ளதைதொடர்ந்து  சேலம் மேட்டூர் அணையின் 16 கண் மதகு வழியே இரவு 9 மணி முதல் 2,000 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது.  . 

40ஆவது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.