கடந்த சில நாட்களாக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. பலத்த மழை இல்லையென்றாலும், கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் ஏற்கனவே நிரம்பியுள்ளதால், மிதமான மழையால் கிடைக்கும் உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டுள்ளது.

கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து, திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு, 17 ஆயிரம் கனஅடியில் இருந்து, 20,500 கன அடியாக அதிகரித்தது. இதனால், வியாழக்கிழமை காலை நொடிக்கு 8 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த தண்ணீர் வரத்து, மாலையில், 10 ஆயிரம் அடியாக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை காலை, இது 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

இதையடுத்து, மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான, 120 அடியை மீண்டும் எட்டியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும், 4வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணையை காண பலரும் ஆர்வமுடன் வந்து செல்கின்றனர்.

காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து இருந்து வருவதால், ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும், கடந்த 50 நாட்களாக தடை அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. வருண பகவானின் கருணையால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியுள்ளது, காவிரி டெல்டா விவசாயிகளை நிம்மதியடைய செய்துள்ளது.