ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள், காதலுக்காக பாலினத்தை மாற்றி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா அடுத்த மோய்னகுடியைச் சேர்ந்தவர் சக்னிக் சக்ரபோர்தி. சவுத் தினஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அனிக் தத்தா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் நடந்த மாடலிங் போட்டியில் கலந்து கொள்ளும்போது இருவரும் அறிமுகமாகினர். பின்னர், இருவரும் இணை பிரியாத நண்பர்களாக மாறினர். ஆண்களான இருவரும், தங்களையே அறியாமல் அதிகளவு அன்பை பரிமாறிக் கொண்டு காதலித்து வந்த இவர்கள், ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவு எடுத்தனர். 

இவர்களது இந்த நடவடிக்கைப் பார்த்த உறவினர்கள், நண்பர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும், இவர்கள் மற்றவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. இவர்களது திருமணத்துக்கும் உறவினர்கள் பச்சைக்கொடி காட்டினர். ஒரே பாலினத்தவர் என்பதால், இவர்களது திருமணத்தைப் பற்றி யாரும் கொச்சையாக பேசிவிடக் கூடாது என்பதால், தங்களில் யாராவது ஒருவர் பாலினத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி அனிக் தத்தா, அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாற்றிக் கொண்டார்.

அனிக் தத்தாவும், சக்னிக் சக்ரபோர்த்தியும் காதலர்களாக சுற்றி வந்த நிலையில், இவர்களது திருமணத்துக்கு இருவரது உறவினர்களும் சம்மதம் தெரிவித்தனர். இவர்களது திருமணம் சில நாட்களுக்கு முன்புதான் நடைபெற்றது. காதலுக்காக பாலினத்தை மாற்றி திருமணம் செய்து கொண்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும்பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நாங்கள் புதுவித குடும்ப வாழ்க்கையைத் 
தொடங்க இருக்கிறோம். உங்களின் அனைவரின் ஆசீர்வாதத்தையும் எதிர்பார்க்கிறோம் என்று அனிக், சக்னிக் ஒரு சேர கூறுகின்றனர்.