சேலம் அருகே 6 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய நபரை போலீஸார் கைது செய்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள இளம்பிள்ளை இடங்கணசாலை புதுரெட்டியூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான பூபதி என்பவருக்கு ஏற்கனவே 5 முறை திருமணமாகியிருக்கிறது. ஆனால் அவர்களில் யார் கூடவும் இல்லாமல், பெற்றோருடன் வசித்து வந்துள்ளார் பூபதி.

இந்நிலையில், சங்ககிரியில் உள்ள தங்கவேல் என்பவருடன் பூபதிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்கவேலின் மகள் கிருஷ்ணவேணியை திருமணம் செய்ய பூபதி விருப்பம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே திருமணமான கிருஷ்ணவேணி, கணவனை இழந்து பெற்றோருடன் வசித்து வருகிறார். கிருஷ்ணவேணியை திருமணம் செய்துகொள்ள பூபதி தெரிவித்த விருப்பத்திற்கு தொடக்கத்தில் தங்கவேல் மறுப்பு தெரிவித்துவந்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டார். கிருஷ்ணவேணியும் ஒப்புக்கொண்டார். 

இதையடுத்து பூபதிக்கும் கிருஷ்ணவேணிக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. திருமணமாகி சில நாட்களுக்கு பிறகு, மனைவி கிருஷ்ணவேணி வைத்திருந்த பத்தரை சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை, விவசாயம் செய்யவும், குடும்ப செலவுக்காகவும் எனக் கூறி பூபதி வாங்கியுள்ளார்.

பூபதியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் சந்தேகமடைந்த மனைவி கிருஷ்ணவேணி, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் பூபதி குறித்து விசாரித்துள்ளார். அப்போது ஏற்கனவே அவருக்கு 5 பெண்களுடன் திருமணமானது தெரியவந்தது. இதுபற்றி பூபதி, அவரது தந்தை கோவிந்தசாமி, தாயார் சிங்காரியிடம் கேட்டபோது, கிருஷ்ணவேணிக்கு மூன்று பேரும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ணவேணி கொடுத்த புகாரின் பேரில், ஆய்வாளர் வீரம்மாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூபதியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பூபதியின் தந்தை கோவிந்தசாமி, தாய் சிங்காரி ஆகியோரை தேடி வருகிறார்கள்.