நாமக்கல்

நாமக்கல்லில் உள்ள ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடலை கைப்பற்றிய காவலாளர்கள் உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட தொட்டிபட்டி கிராமத்தில் சுமார் 200 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்ட ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் சுமார் 35 வயது மதிக்கதக்க ஆணின் சடலம் மிதக்கிறது என்று வெண்ணந்தூர் காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த காவலாளர்கள், சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து காவலாளர்கள் விசாரணை நடத்தினர்.

இறந்தவரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் இறந்து 2 அல்லது 3 நாட்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஏரியில் மீன் பிடிக்க பல வருடங்களாக குத்தகை ஏலம் விடப்படாததால் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவு நேரத்தில் இந்த ஏரிக்கு வந்து மீன் பிடித்து செல்வது வழக்கம்.

அதுபோல இவரும் மீன் பிடிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது கொலை செய்து ஏரியில் வீசிச் சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

உடற்கூராய்வுக்கு பிறகுதான் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியும் என்பதால் காவலாளர்கள் காத்திருக்கின்றனர்.