மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின்மகன் பிரவீன்குமார் எல்லூரி ஒன்றில் படித்து வந்தார். பிரவீன்குமார் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக செல்வது வழக்கம். இதனால் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சைலோ கண்ணன் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அடிக்கடி இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதால் ஆத்திரம் அடைந்து பிரவீன்குமாரை கண்ணன் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்

இந்நிலையில் நேற்று இரவு  பிரவீன்குமார் அவரது நண்பர் காளியுடன் வீட்டின் முன்பு நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் பிரவீன்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. அதை தடுக்க சென்ற அவரது நண்பர் காளியையும் அந்த கும்பல் வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே பிரவீன்குமார் பரிதாபமாக இறந்தார். படுகயாம் அடைந்த காளி சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பிரவீன் குமாரை கொலை செய்ததாக கூறப்படும்  கண்ணன் அவரை  கொலை செய்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அனுப்பானடி அம்பேத்கார் நகரை சேர்ந்த அரசமகாராஜன் என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார். அதில் அவர் தலையில் சிறிய காயத்துடன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதைத் தொடர்ந்து அனுப்பானடி வந்த கண்ணன் பிரவீன்குமாரை கொலை செய்துள்ளார்.