திருச்சி மலைக்கோட்டையில் காதலர்கள் செல்வதை கண்டித்து கையில் தாலியுடன் நின்று போராட்டம் நடத்திய இந்து அமைப்பினரால் பரபரப்பு ஏற்பட்டது.
காதலர் தினம் குறித்து தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு மேற்கத்திய கலாச்சாரமான காதலர் தினம் கொண்டாடுவதும் ஒரு காரணம் என்று சொல்லி வருகிறது.பலாத்காரம் போன்ற சம்பவங்கள் நடப்பதற்கு மேற்கத்திய கலாச்சாரமான காதலர் தினம் கொண்டாடுவதும் ஒரு காரணம் என்பதே இவர்களின் வாதமாக உள்ளது.இன்றைய காதலர் தினத்திலும் இதுபோன்ற போராட்டங்கள் சில இடங்களில் நடந்துள்ளது..
திருச்சி மாவட்டத்தின் அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. மலைக்கோட்டை அடிவாரத்தில், மாணிக்க விநாயகரும், மத்தியில் தாயுமான சுவாமியும், உச்சியில் உச்சிப்பிள்ளையார் கோவிலும் உள்ளது.காதலர் தினமான இன்று, மலைக்கோட்டையில் குவியும் காதலர்களால் காதல் கோட்டையாக மாற்றப்படுவதை கண்டித்தும், காதலர் தினம் என்ற பெயரில், கோவிலுக்கு வந்து கலாச்சாரச் சீரழிவில் ஈடுபடுவதை கண்டித்தும்,கோயில் முன்பு, அகில பாரத வீர விவேகானந்தர் பேரவை, அனுமன் சேனா சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவிலுக்கு வரும் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க, மஞ்சள் கயிறு உடன் கூடிய தாலி வழங்க, கையில் தாலியுடன் போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டம் முடித்து போராட்டக்காரர்கள் கோயிலுக்குள் நுழைய முற்பட்டனர். அதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்து அமைப்புகளின் போராட்டம் காரணமாக, மலைக்கோட்டை கோயில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோயிலுக்கு ஜோடியாக வந்த காதலர்களை தடுத்து நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்பினர்.

இதே போல் நெல்லை மாவட்டம் பிராஞ்சேரி பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் சிலர் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் கூடினர். பின்னர் கடிக்காமல் இருக்கும் இரு நாய்களை பிடித்து அதன் கழுத்தில் மாலை போட்டு திருமணம் செய்து வைப்பதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளனர். அது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இதுபோல கடந்த 2018 ஆம் ஆண்டு நெல்லை அறிவியல் மையத்தில் இளைஞா்கள் சிலர் காதலர் தினத்தை கொண்டாடியுள்ளனர். அப்போது அங்கு வந்த இந்து அமைப்பினர் அவர்களிடம் தாலிக்கயிற்றைக் கொடுத்து இப்போதே தாலி கட்டி திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளனர்.தகவல் அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் இந்து அமைப்பைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
