தேனி

தேனியில் கிராவல் மண் கடத்தி வந்த லாரி உரிமையாளர் மற்றும் அதன் ஓட்டுநரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியைச் சுற்றியுள்ள குளங்களில் கிராவல் மண் மற்றும் வண்டல் மண் விற்பனைக்காக கடத்தப்படுகிறது என்று புகார் எழுந்தது.  அதனால் ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வருவாய்துறையினரால் வாகனசோதனை நடத்தப்பட்டது. 

அதன்படி, நேற்று ஒட்டன்சத்திரம் சோதனைச்சாவடி அருகே வருவாய்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை வருவாய்துறையினர் நிறுத்தினர். பின்னர் அதனை சோதனையிட்டனர். 

அதில் கிராவல் மண் ஏற்றப்பட்டு வந்ததும் அதற்கு எந்தவித அரசு அனுமதியும் இல்லை என்பதும் தெரியவந்தது. 

இது தொடர்பாக ஒட்டன்சத்திரம் கிராம நிர்வாக அலுவலர் நா.வரதராஜன் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் கிராவல் மண் கடத்தி வந்த காப்பிலியபட்டியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் சுப்பிரமணி (42) மற்றும் லாரியை ஒட்டி வந்த விருப்பாச்சியைச் சேர்ந்த கருப்புச்சாமி (47) ஆகியோர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.