Asianet News TamilAsianet News Tamil

“பாஜக கூட்டணிக்கு வெற்றி உறுதியான பதற்றத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுறாரு..” வானதி சீனிவாசன்

பாஜக கூட்டணிக்கு வெற்றி உறுதியான பதற்றத்தில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Loksabha Elecitons Cm Mk Stalin speaks in the tension of victory for the BJP alliance says Vanathi Srinivasan Rya
Author
First Published Mar 22, 2024, 10:21 AM IST

பாஜக கூட்டணிக்கு வெற்றி உறுதியானதால் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பதற்றம் தெரிகிறது என்றும் இனி தமிழ்நாட்டு மக்கள் பிரதமர் மோடி பக்கமே என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

பாஜக எம்.எல்.ஏவும் மூத்த தலைவருமான வானதி சீனிவாசன் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்  “ 2024 நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நாம் சந்திக்கும் எதிரிகள் நமக்கான அரசியல் எதிரிகள் மட்டுமல்ல, இந்தியாவின் எதிரிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரிகள். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும், மதச்சார்பின்மை கொள்கைக்கும் எதிரிகள். கூட்டாட்சி கருத்தியலுக்கும் எதிரிகள். மொத்தமாகச் சொல்வதென்றால் மனிதகுலத்தின் எதிரிகள்" என்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இண்டி கூட்டணிக்கு கச்சிதமாக பொருந்தும் வாசகங்களை பாஜகவை நோக்கி முதலமைச்சர் ஸ்டாலின் வீசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள், எதற்கெடுத்தாலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக பாஜக அரசு செயல்படுவதாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 1975ல் ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு, நெருக்கடி நிலையை அறிவித்த அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை எல்லாம் சிறையில் அடைத்து விட்டு நாடாளுமன்றத்தைக் கூட்டினார்.

PMK Candidates: பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு- 9 வேட்பாளர்கள் யார்.? - முழு விவரம் இதோ

அரசியலமைப்புச் சட்டத்தில் முக்கியத் திருத்தங்களைச் செய்தார். நமது அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்ற வார்த்தை அப்படித்தான் சேர்க்கப்பட்டது. அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தையே முடக்கி விட்டு, அரசியலமைப்புச் சட்டத்தை திருத்திய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, பாஜகவை நோக்கி அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரி என்கிறார்.

மதச்சார்பின்மை என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் எதிராக செயல்படுவதையே முழுநேரத் தொழிலாக திமுக செய்து வருகிறது. அனைத்து மத பண்டிகைகளுக்கும் தவறாமல் வாழ்த்து தெரிவிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூறுவதில்லை. இப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மீது வெறுப்பை கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பாஜகவை நோக்கி நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பன்முகத்தன்மைக்கு எதிரி என்கிறார். தனக்குதானே கூறிக் கொள்ள வேண்டியதை பாஜகவை நோக்கி வீசியிருக்கிறார்.

ஐ அம் வெயிட்டிங்! துப்பாக்கி பட பாணியில் அண்ணாமலையை சீண்டிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன்!

15 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசில் அங்கம் வகித்தபோது கூட்டாட்சி, ஆளுநர் பதவி பற்றியெல்லாம் திமுகவுக்கு தெரியவில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும், மத்தியில் ஆட்சியில் இருக்கும்போது ஆளுநர் துணையுடன் தமிழகத்தை ஆண்ட ஜெயலலிதாவுக்கு பெரும் குடைச்சலைக் கொடுத்த திமுக இன்று கூட்டாட்சி தத்துவம் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு என்ன செய்தது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். பத்தாண்டு கால மோடி ஆட்சியில் சிறுபான்மையினர் உட்பட எந்தத் தரப்பு மக்களுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கிறது. எனவே, முதலமைச்சர் ஸ்டாலினின் பொய்யும், புரட்டும் தமிழக மக்களிடம் எடுபடாது.

வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கே தமிழக மக்கள் வாக்களிப்பார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தல் களம், பாஜக – திமுக கூட்டணி இடையிலான போர்க்களமாக மாறியுள்ளது. அதில் வெற்றி பாஜக கூட்டணிக்கு என்பதும் உறுதியாகி உள்ளது. அந்த பதற்றத்தில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே பதற்றம் வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் இனி பிரதமர் நரேந்திர மோடி பக்கமே.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios