Asianet News TamilAsianet News Tamil

பள்ளிக்கு அருகில் சாராயக் கடை; 150-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்; சூறையாட தயார் என்று சூளுரை...

liquor Shop near school More than 150 women struggle
liquor Shop near school More than 150 women struggle
Author
First Published May 25, 2018, 8:31 AM IST


திருப்பூர்
 
திருப்பூரில் பள்ளிக்கு அருகில் புதிதாக திறக்கப்பட இருந்த டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை முற்றுகையிட்டு 150-கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் ஏ.வி.பி.சாலை கவிதா லட்சுமி நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், நேற்று முதல் அந்த கடை திறக்கப்பட இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு சாராய புட்டிகள் அங்கு வந்திறங்கின.

இதனை அறிந்த மக்கள் ஆத்திரமடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அந்த பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலையில் அந்த சாராயக் கடை முன்பு திரண்டனர்.

பின்னர், அந்த பகுதியில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் அனுப்பர்பாளையம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், "தற்போது திறக்கப்பட உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை சுற்றி ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. 

மேலும், கடைக்கு மிக அருகில் அரசு பள்ளி உள்ளது. பள்ளிக்கு அருகில்தான் கடையை திறப்பீர்களா? இங்கு டாஸ்மாக் கடை திறந்தால் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு பாதுகாப்பு இருக்காது. 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த பகுதியில் டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்பட இருந்த நிலையில் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக கடை திறக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட உள்ளது. இது இந்த பகுதி மக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். 

எனவே, இந்த கடையை திறக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மேலும், மக்களின் எதிர்ப்பை மீறி கடையை திறந்தால், கடையை சூறையாடவும் தயங்க மாட்டோம்" என்று அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து காவலாளர்கள் டாஸ்மாக் அதிகாரியிடம் செல்போனில் தொடர்புகொண்டு பேசினர். அப்போது, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்படாது என்று உறுதியளித்தார். இதனால் அந்த டாஸ்மாக் கடை திறக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து மக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios