கடலூர் 

கடலூரில், கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர் மின்னல் தாக்கி பரிதாபமாக பலியானார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதில், பண்ருட்டியில் நேற்று மாலையில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.  இதேபோல நெய்வேலி, மந்தாரக்குப்பம் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

இந்த நிலையில் நெய்வேலி அருகே உள்ள வடக்கு சேப்ளாநத்தத்தைச் சேர்ந்தவர் ஆனந்தசெல்வன்(22). இவர் மாலையில் அதே பகுதியில் உள்ள மைதானத்தில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென இடி - மின்னலுடன் பலத்த காற்று வீசியதோடு ஆனந்த செல்வனை மின்னல் தாக்கியது. இதில் மயக்கமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆனந்தசெல்வன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்ட அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மந்தாரக்குப்பம் காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.