திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா  அண்மையில் நடைபெற்றது. கடந்த  23ந ஆம் தேதி மலை உச்சியில்  மகாதீபம் ஏற்றப்பட்டது. அந்த தீபம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வரை எரியும் என  தெரிகிறது..

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்கள் மத்தியில் ஒரு வதந்தி  பரவியது.

அதாவது திருவண்ணாமலை மலையில் ஏற்றப்பட்ட கார்த்திகை தீபம் அணைந்துவிட்டது என்றும் இதனால் வீட்டில் உள்ள ஆண்களுக்கு ஆபத்து என்றும் செய்தி பரவியது.

இந்த ஆபத்தை தவிர்க்க வேண்டும்மென்றால் வீட்டில் எத்தனை ஆண்கள் உள்ளார்களோ அத்தனை அகல் விளக்குள் வீட்டுக்கு வெளியே வரிசையாக ஏற்றிவைத்து வணங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

இந்த வதந்தி  காட்டு தீயைப் போல் வேகமாக பரவியதால் பயந்த போன ஏராளமான பெண்கள்  தங்கள் வீட்டுக்கு வெளியே அகல் விளக்கு ஏற்றிவைத்து வணங்குவதோடு, தங்களது உறவினர்களுக்கும் இந்த தகவலை சொல்லி விளக்கு ஏற்றுமாறு கூறி வருகின்றனர்.

ஆனால் திருவண்ணாமலை கோவில் நிர்வாகத்தினர் இதை பொய் என்று கூறி வருகின்றனர்.  மகாதீபத்தன்று, மலை உச்சிக்கு கொண்டு சென்று காடா துணியை நெய்யில் ஊறப்போட்டு, நெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள்.

தீபம் அணையாமல் இருக்க சிலர் மலை உச்சியிலேயே இருப்பர். மாலை 6 மணிக்கு ஏற்றப்படும் தீபம் மறுநாள் விடியற்காலை 6 மணிக்கு அணைக்கப்படும், கோயிலில் இருந்து நெய் எடுத்துச்சென்று கொப்பறையை சுத்தம் செய்து மாலை 6 மணிக்கு மீண்டும் தீபம் ஏற்றுவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் 11 நாள் மலை உச்சியில் தீபம் எரியும். இதுதான் வழக்கம். இந்த ஆண்டு தீபம் அணையவில்லை என்றும், பகலில் யாராவது மலை உச்சியை பார்த்து தீபம் தெரியாதவர்கள் கிளப்பிவிட்ட வதந்தி இது என்கிறார்கள். ஆனால் இந்த வதந்தி என்னவோ தமிழகம் வேகமாக பரவி வருகிறது.