பாடியில் நடைபயிற்சி செய்த முதியவரை ஆட்டோவில் கடத்தி சென்று, அவரிடம் இருந்து தங்க சங்கிலி, மோதிரத்தை பறித்த 2 பேரை கொரட்டூர் போலீசார் கைது செய்தனர்.

சென்னை அம்பத்தூர் அருகே பாடி, வடக்கு மாட வீதியை சேர்ந்தவர் கோபிநாத் (71). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை 6.30 மணியளவில் வீட்டிலிருந்து நடைபயிற்சிக்கு புறப்பட்டார். அதே பகுதியில் ராஜா தெரு வழியாக வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவ்வழியே ஆட்டோவில் வந்த 2 பேர், கோபிநாத்தை வழிமறித்து, அங்குள்ள சிவன் கோயிலுக்கு வழி கேட்டனர். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கடத்தி சென்றனர். இதை அறிந்ததும் கோபிநாத் அலறி சத்தம் போடவே, அவரை கொன்றுவிடுவதாக டிரைவர் உட்பட 2 பேர் மிரட்டியுள்ளனர்.

பின்னர் அந்த ஆட்டோ கோடம்பாக்கம் பகுதிக்கு சென்றது. அங்கு கோபிநாத்தை மிரட்டி, அவர் கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் சங்கிலி மற்றும் கையில் இருந்த ஒரு சவரன் மோதிரத்தை 2 பேரும் பறித்தனர். பின்னர் அவரை அங்கு சாலையோரத்தில் இறக்கிவிட்டு, 2 பேரும் ஆட்டோவில் தப்பி சென்றனர். இதையடுத்து கோபிநாத் மீண்டும் மாநகர பேருந்து மூலம் பாடிக்கு வந்திறங்கினார்.

நடந்த சம்பவங்கள் குறித்து கொரட்டூர் போலீசில் கோபிநாத் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மோகன், எஸ்ஐக்கள் அனிருதீன், காந்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஆட்டோவில் தப்பிய 2 பேர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்தனர்.

இந்நிலையில், அம்பத்தூர் உதவி கமிஷனர் கர்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர். விசாரணையில், பாடி பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான ஆட்டோ எண்ணை வைத்து 2 பேர் குறித்து விசாரித்தனர்.

அவர்கள் திருநின்றவூர், லட்சுமிபுரத்தை சேர்ந்த மகேந்திரன் (65), அதே பகுதியில் சுதேசி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் விஜய் (39) எனத் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த 2 பேரையும் நேற்றிரவு கொரட்டூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் நேற்றிரவு அவர்களை அம்பத்தூர் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.